தங்களின் கருத்துக்களை தெரிவிக்க போதிய அவகாசம் கொடுப்பதில்லை என்றும், பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதால் டிவி விவாதங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தமிழக பாஜக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் தொலைக்காட்சி விவாதங்கள் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மக்கள் மனதில் நின்றுவிட்டது. முதலில் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்கி வைத்த இந்த விவாத நிகழ்ச்சியை தற்போது அனைத்து தொலைக்காட்சி சேனல்களும நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய சேனல்கள் நடத்தும் விவாத நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும், விவாதம் நடத்தி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருவது இந்நிழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.
ஆனால் தற்போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அவ்வாறு ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுகிறதா என்று கேட்டால் பலரிடம் இருந்து இல்லை என்றுதான் பதில் வருகிறது. அதற்கு காரணம் பலதரப்பட்ட நபர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யும் இந்நிகழ்ச்சியில், சிலர் கூறும் கருத்துக்கள் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகும் நிலை ஏற்படும்போது அங்கு ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. அப்போது மற்றவர்கள் அந்த கருத்துக்கு எதிர்கருத்து கூறும்போது அது பிரச்சினையில் முடிந்து விவாத நிகழ்ச்சி பாதியில் முடிக்கும் சூழல் ஏற்படுகிறது.
மேலும் கருத்து மோதல் காரணமாக சிலர் நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறியதும், நிகழ்ச்சி அரங்கத்தில் மைக்கை கழற்றி வைத்து விட்டு கூச்சலிட்டு சத்தம் போடும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அந்த சம்பவத்தை தொடர்ச்சியாக டிவியில் காட்டும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. இதனால் ஒரு சில அரசியல் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதங்களை தவிர்த்து வரும் நிலையில், தற்போது தமிழக பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களை தவிர்க்க முடிவு செயயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னை, திநகரில் உள்ள கமலாலயத்தில், நடந்தது. மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் விபி துரைசாமி, எம்என்ராஜா, எம்எல்ஏ க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், அனைவரும் ஒருமித்த முடிவாக தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக, டிவி விவாத நிகழ்ச்சிகளில், பாஜக சார்பில் பங்கேற்பவர்களுக்கு, தங்கள் கருத்தை தெரிவிக்க போதிய நேரம் கொடுப்பதில்லை என்றும் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் போது, எதிர் தரப்பினர் பேச விடாமல், தங்களின் கருத்துக்களை சொல்வது போல், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கின்றனர். நெறியாளர்களும், நடுநிலையாளர்களாக இருப்பதில்லை என்றும், விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர், ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்படுகின்றனர். இதனால் தற்காலிகமாக விவாத நிகழ்ச்சிகளில், பாஜக சார்பில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil