தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) கொலையில் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை சென்னை நகர போலீஸார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை செம்பியத்தில் வைத்து ஜூலை 5ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து தீவிர விசாரணை நடத்தவும், விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் தாக்கியதாகவும், அவர் சாலையில் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. எனினும் கொலைக்கான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
செம்பியம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆம்ஸ்ட்ராங் தாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைதாகி உள்ளனர். தொடர்ந்து, குற்றவாளியைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்ததும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை சம்பந்தப்பட்ட கும்பல் வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஜூலை 5 ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்று விட்டு கத்தியை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், கத்தியை வைத்தபின் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளனர். இந்தக் கும்பல் கொலை செய்தபின் பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயே விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“