TN Budget 2021 Leaders Reaction : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழகத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்பட்டது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வேளாண்மை,உயர்கல்வி சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ஒ.பன்னீர் செல்வம், வரும் காலங்களில் தமிழகத்தின் கடன்தொகை 5 லட்சம் கோடியை தாண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு 12 ஆயிரம் கோடி செலவும் செய்யப்பட்டதாகவும், தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடியும், காவல்த்துறையை நவீனப்படுத்தும் நோக்கத்தில் 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பட்ஜெட் மீதான உரையை புறக்கணித்த திமுக வெளிநடப்பு செய்த நிலையில், வரும் 25 முதல் 27-ந் தேதி வரை பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து தலைவர்களின் கருத்து என்ன என்பதை பார்ப்போம் :
திமுக தலைவர் ஸ்டாலின் :
தமிழக நலனைப் புறக்கணித்து கமிஷன் அடிப்பதற்காகவே கடன் வாங்கி ரூ.5.70 லட்சம் கோடியாக சுமையை அதிகரித்து, இருவரும் நீங்காத நிதிப்பேரிடரை உருவாக்கி விட்டனர்! பிறக்கும் குழந்தையின் தலையில்கூட ரூ.62,000க்கும் மேல் கடன் சுமை உள்ளது. கழகம் ஆட்சிக்கு வந்ததும் நிதி முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுத்து, நிலைமையை விரைந்து சீரமைப்போம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் :
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வாழ்க்கைக்கு உதவாத வா(பொ)ய்ப்பந்தல் பட்ஜெட். இடைக்கால நிதிநிலை அறிக்கை வாக்காளர்களைக் கவர்ந்திட பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ள வா(பொ)ய்ப்பந்தலாகும். வளமார்ந்த தமிழகத்தை உருவாக்கி, மக்கள் நல வாழ்க்கைக்கான பாதை அல்ல என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் :
தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்காதது ஏமாற்றம் தருகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ :
கொரோனா பெருந்தொற்றுக்கு இலட்சக்கணக்கான மக்கள் ஆளாகி துன்பத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசித் திட்டத்திற்கு மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எடப்பாடி பழனிச்சாமி அரசு கை கழுவி உள்ளது ஏற்கத்தக்கது அல்ல. ஆட்சியின் அந்திமக் காலத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க. அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.