scorecardresearch

ரூ9000 கோடி மெட்ரோ ரயில், செம்மொழிப் பூங்கா… கோவைக்கு அள்ளிக் கொடுத்த பட்ஜெட்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

TN Budget 2023
TN Budget 2023

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவையில் ரூ.9,000 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

தமிழகத்தை பொருத்தவரையில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. தற்போது 2வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி கோவையில் ரூ.9,000 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

அவர் கூறுகையில், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது.

ஜவுளி தொழில் வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதி, உற்பத்தி எனத் தொழில்களின் சிறந்து விளங்குகிறது. மேலும், தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. கோவையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இங்கு மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவினாசி சாலை சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும், என்றார்.

அதேபோல மதுரையில் ரூ.8,500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை மற்றும் கோவை நகரங்களில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேலும் கோவையில் ரூ. 43 கோடியில் செம்மொழி பூங்கா, 2 கட்டங்களாக அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu budget 2023 madurai metro rail coimbatore metro rail ptr