தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில், மதுபான ஊழலை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டசபையில் மதுபான முறைகேடு குறித்து விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.