இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில், எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெற்றிபெற வாய்ப்பு? என்பது குறித்து விவாதங்கள் நடக்கின்றன. உளவுத்துறையினரும் இது தொடர்பான ஆய்வுகளில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றத்திலுள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 214 ஆக உள்ளது. இதன்படி, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள 108 எம்.எல்.ஏ.க்களின் பலம் போதுமானது. எடப்பாடியார் வசம் 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால், நூலிழையில் ஆட்சியை நகர்த்தி வருகிறார். இதே நிலை 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்ற பின்பு நீடிக்குமா? என்பது கேள்விக்குறி.
சட்டமன்றம் முழு பலத்தை பெற்ற பிறகு, ஆட்சியை தக்க வைக்க எடப்பாடியாருக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதற்காக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து, தொகுதிக்கு குறைந்தது இரு அமைச்சர்கள் வரும் வீதம் பட்டியலும் போட்டுள்ளார் எடப்பாடி. இன்றைய சூழலில் தேர்தல் நடைபெற்றால், அ.தி.மு.க. எத்தனை தொகுதிகள் வெற்றி பெறும் என விவாதங்கள் பல முனைகளிலும் நடக்கின்றன.
உளவுத்துறையினரும் இது தொடர்பாக தொகுதி வாரியாக ஆய்வுப் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். சாத்தூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், விளாத்திக்குளம் ஆகிய தொகுதிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக இருப்பதாக உளவுத்துறை உற்சாக ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.
அதே சமயம் சோளிங்கர், குடியாத்தம், பூந்தமல்லி, ஆம்பூர், திருப்போரூர், திருவாரூர் ஆகிய தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதகமான நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆண்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, தஞ்சாவூர், பரமக்குடி, மானாமதுரை ஆகிய ஐந்து தொகுதிகளில் டிடிவி தினகரனின் அ.ம.மு.க. தெம்புடன் இருப்பதாகவும் ஒரு தகவலை உளவுத்துறை திரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
அரவக்குறிச்சி, அரூர், நிலக்கோட்டை, பெரியகுளம், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கும் என தெரிய வந்திருக்கிறது. அரூர், பெரம்பூர் தொகுதிகளில் தி.மு.க.- அ.ம.மு.க.விற்கும், பெரியகுளம், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. - அ.ம.மு.க.விற்கும் இழுபறி இருக்கும் என்கிறார்கள்.
உளவுத்துறையின் ஆய்வுக்கு பிறகு, நிலைமைகளுக்கு ஏற்ப சில பணிகளை ஆளும்கட்சி முன்னெடுக்கிறது. அதேசமயம், இந்தத் தகவல் எதிர்கட்சிகளுக்கும் கசிந்து அவர்களும் தங்கள் கட்சிக்காரர்களை முடுக்கி விட்டபடி இருக்கிறார்கள்.