TN By-Polls result date, time, counting process : தமிழகத்தில் காலியாக இருந்த 2 சட்டமன்ற தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த தேர்தல் முடிவுகள் நாளை (24.10.19) வெளியாகுகின்றன. 2தொகுதிகளில் அதிமுக - திமுக என வெற்றியை தீர்மானிப்பது யார்? என்ற கேள்வி மேலூங்கியுள்ளது. இந்த தொகுதியில் மொத்த 12 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.நாளைய தினம் 2 (விக்கிரவாண்டி, நாங்நேரி) தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலை முடிவு வரை எங்கே? எப்போது? எப்படி? என்ற முழு விபரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
விக்கிரவாண்டி தொகுதி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இஎஸ் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 344 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 344 வாக்கு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 358 யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3 சதவீதம் அதிகம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் மட்டுமின்றி வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு இங்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
நாங்குநேரி தொகுதி:
நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு 66.35 சதவீதம் மட்டுமே நடந்தது. கடந்த சட்டசபை தேர்தலை விட 5 சதவீதம் குறைவான வாக்குகள் தொகுதியில் பதிவானது. நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குசாவடிகளிலும் இருந்து 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 21 ஆம் தேதி இரவு சீல் வைக்கப்பட்டு, ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.
கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு விவிபேட் இயந்திரங்களும் தனியாக வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணித்து வருகின்றனர். கல்லூரியின் உள்பகுதி, வளாக பகுதி, வெளிப்பகுதி என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை விபரம்:
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள 14 மேஜைகள், மேஜைக்கு தலா ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர் ஒருவர் இருப்பார்கள். கூடவே மைக்ரோ அப்சவர்களும் நியமிகப்பட்டுள்ளனர்.
மேஜையில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நிலவரம் நேரடியாக தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்படும்.
முடிவுகள்:
நாளை பிற்பகல் அறிவிக்கப்படுகின்றன.முடிவுகள் வெளியாவதை தொடர்ந்து அந்த தொகுதியில் கலவரங்கள் அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.