எம்.ஜி.ஆர். காலத்து சர்ச்சை - திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகத்ரட்சகன், அடிக்கல்லை அகற்றி விட்டு, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமது உறவினர்கள் 41 பேருக்கு, அந்த இடத்தை ஒதுக்கியதாக புகார் அளிக்கப்பட்டது
குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் கம்பெனியின் நிலத்தை, தமது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன், வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
Advertisment
சென்னை பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனியின் தலைவராக ஜெகத்ரட்சகன் இருந்து வந்தார். இந்தக் கம்பெனியின் நிலத்தை, 1982ல் தமிழ்நாடு நகர்ப்புற நில மீட்பு மற்றும் சீரமைப்புச் சட்டத்தின் கீழ் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழக அரசின் கீழ் கொண்டு வந்தார். இந்த நிலம் நீர் வள ஆதாரத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கூறி 1984ல் அடிக்கல் நாட்டினார்.
சிபிசிஐடி சம்மன்
அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகத்ரட்சகன், அடிக்கல்லை அகற்றி விட்டு, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமது உறவினர்கள் 41 பேருக்கு, அந்த இடத்தை ஒதுக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. மனை பெற்றவர்கள் அனைவரும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், குரோம் லெதர் கம்பெனியில் பணியாற்றி வந்த ஊழியர்கள் என்று கூறப்பட்டது. இந்த மனை 1996ல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை நில மோசடி குற்றச்சாட்டின் கீழ் கொண்டு வந்து ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது இதுதொடர்பாக, வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.