Tamilnadu News Update : சென்னை மடிப்பாக்கம் பகுதியில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் உட்பட7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் ராஜாஜி நகர் 188-வது வார்டு திமுக செயலாளராக இருந்தவர் செல்வம். இவர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு பஜார் சாலையில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மகும்பல், அவரை சராமாரிய வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வத்தின் உடலை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செல்வத்தின் கொலை சம்பவம் தெரிந்து அப்பகுதி மக்கள் செல்வத்தின் வீட்டைச் சுற்றி திரண்டதால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மதுபாட்டில்களை உடைத்து சாலையில் வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (பிப்ரவரி 3) திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் இருந்து டிரைவருடன் அழைத்து வரப்பட்ட அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன், திமுக பிரமுகர் சி.செல்வம் கொலையில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி அதிமுக அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், அவரது டிரைவர் தனசீலன், விக்னேஷ், பல்லவம் சாலையை சேர்ந்த புவனேஸ்வர், வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய் (21), ஆர்கோணத்தை சேர்ந்த விக்னேஷ் (26), திருவள்ளூரை சேர்ந்த கிஷோர்குமார் (21) ஆகியோர் இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழு பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சொத்து தகராறே இந்த கொலை சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று மேடவாக்கம் போலீசார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த தேர்தலில், செல்வம் மற்றும் அவரது மனைவி ஷமீனாவுக்கு சீட் ஒதுக்கப்பட இருந்தது, இதுவே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்த நிலையில், ரியல் எஸ்டேட் விவகாரம் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “