நன்னடத்தை அடிப்படையில் சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுனர் இதுவரை எந்த முடிவுவும் எடுக்காத நிலையில், 5 சிறை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட கோரிய வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த முறை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது சின்னா, நன்னடத்தை அடிப்படையில் 49 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை ஆளுனருக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.
மேலும் தமிழக முதல்வரின் இந்த பரிந்துரைக்கு ஆளுனர் தற்போதுவரை எந்த பதிலும் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறி, உள்துறை செயலாளரின் கடிதத்தை நீதிபதியிடம் சமர்பித்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷாகுல் ஹமீது, அஸ்லம், உள்ளிட்ட 5 சிறை கைதிகளின் சார்பில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையில் ஆஜரான அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் நடத்தை அடிப்பயைில் முன்கூட்டியே சிறை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அரசன் பரிந்துரை குறித்து ஆளுனர் இதுவரை முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஏற்கனவே இதேபோன்று உச்சநீதிமன்றத்தில் சிறை கைதி ஒருவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது நடைபெற்ற விசாரணையில், ஆளுனரிடம் கோப்புகள் நிலுவையில் உள்ளதாக கூறி ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இப்போது ஜாமீன கோரியுள்ள மனுதாரர்களை விடுவிக்க அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன கோரி மனுதாக்கல் செய்த 5 பேருக்கும் 3 மாத இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“