ஜனனி நாகராஜன்
Tamilnadu jayalalitha Memorial In Marina : மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் மூலமாக 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் மறைந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் எம்ஜிஆர் கல்லறைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27, 2021 ஆம் நாள் இந்த நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் தைரியத்தையும், விடாமுயற்சியையும் குறிக்கும் வகையில், பீனிக்ஸ் பறவையின் சிறகு போல இந்த நினைவிடம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நினைவிடத்தை அலங்கரிப்பதற்காக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து அறியவகை செடி தாவரங்களை இறக்குமதி செய்து அழகுபடுத்தியுள்ளனர். இந்த தாவரங்கள் அனைத்தும் இயற்கை முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நினைவிடத்தை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த நினைவிடம் இயல்பாகவே மக்கள் கூட்டம் அலைமோதும் இடமாக மாறியுள்ள நிலையில், சமீப காலமாக இந்த நினைவிடம் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, நினைவிடத்தை பார்வையிட வந்திருந்த ஒருவரிடம் கேட்டபோது, அம்மாவின் நினைவிடத்தில் நான் முதல் முறையாக வருகிறேன். இந்த நினைவிடம் இவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் நினைவிடத்தைச் சுற்றியுள்ள செயற்கை சிறுகுளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதை சரி செய்தால் இந்த நினைவிடத்தை பார்வையிட வரும் மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கும். ஜெயலலிதா போன்ற தலைவர்கள் நினைவிடத்தில் வருவதற்கு பெருமை கொள்கிறேன்.
இங்கு வந்து நாள் முழுவதும் தியானம் செய்துவிட்டு வீடு திரும்புவது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. நான் இங்கு ஆட்டோ ஓடுகிறேன். என்னுடன் வரும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மெரினா கடற்கரைக்கு அருகில் இருக்கும் நினைவிடத்தை பார்த்து வியந்து போகின்றனர். அவர்கள் வியந்து போற்றுவதை கேட்கும்போது என் மனதிற்கு ஆனந்தம் அளிக்கிறது. இங்கு காணப்படும் தாவரங்களை நான் எங்கும் கண்டதில்லை, இவ்விடத்தில் வசிப்பது மனஅமைதியை அளிக்கிறது.
மேலும், இங்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும் அரியவகை தாவரங்களை போல அறிய காட்சிப்பொருட்கள் வைத்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். மக்கள் முன்னிலையில் பெருந்தலைவர்களின் நினைவிடங்களும், அருங்காட்சியகங்களும் வைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறும், நாட்டுக்காக அவர்கள் அளித்த தியாகங்களும் மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தி அவர்களின் வாழ்வில் கிடைத்த உரிமைகளின் வரலாற்றை போற்ற வேண்டும் என்பதால் தான். அதற்கு நினைவிடங்களை சீராக பராமரித்து அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
தலைவர்களின் நினைவிடங்களை தமிழக அரசின் செய்தித்துறை நிர்வகித்து வருகிறது. ஜெயலலிதா சார்ந்த கட்சி இன்று எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவுக்காக உருவாக்கப்பட்ட இந்த நினைவிடம் அரசு சொத்து. கட்சி சார்பில் இல்லாமல் பலரும் வந்து போகிற இடம். இன்னும் சொல்லப்போனால் மெரினாவை தூய்மையாக வைக்கிற அரசுக்கு இந்த நினைவிடத்தையும் தூய்மையாக வைக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் நினைவிடங்களை பாதுகாத்து பராமரிக்கும் அக்கறையை ஜெயலலிதா நினைவிடத்திலும் காட்ட வேண்டும் என அங்கு வரும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.