/indian-express-tamil/media/media_files/2025/05/26/O4FWx8Z6hmPe6K0Xk0IY.jpg)
சென்னை: மாதக்கணக்கில் தேக்கமடைந்தும், தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீர்வளத் துறை (WRD), சென்னை மாநகராட்சி, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய அரசு அமைப்புகள், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
கூட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்போது குவைத்-இ-மில்லத் நகரில் கவனம் செலுத்தி, ஆற்றங்கரையில் வசித்து வரும் 200 குடும்பங்களை இடமாற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து, நேற்று (மே 25) அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள் அடங்கிய அரசின் மறுவாழ்வுத் திட்டத்தை 116 குடும்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டனர்.
மேலும் பல குடியிருப்பாளர்களை ஒத்துழைக்கச் செய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அனகாபுத்தூர் பகுதியில் மொத்தம் 400 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. இப்பணியின் முந்தைய கட்டங்களில் தோபிகானா பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குவைத்-இ-மில்லத் நகரில் இருந்து ஏற்கனவே 200 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது எஞ்சியுள்ள 200 குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று (மே 25) மாலை நிலவரப்படி, 116 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பருவமழை தொடங்குவதற்குள் இப்பணி நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், அடையாறு பாலம் அருகே உள்ள மல்லிப்பூ நகர் அடுத்த பெரிய சவாலாக இருக்கும் என்றும், அங்கு 1,200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் திட்டமிட்டபடி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விரிவான ஒருங்கிணைப்பும் அதிக வளங்களும் தேவைப்படும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பரந்த சுற்றுச்சூழல் மற்றும் வெள்ளத் தடுப்பு இலக்குகளுடன் ஒத்துப்போனாலும், அவ்வப்போது பதற்றமான சூழ்நிலைகள் நிலவிய வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் ஒரு குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கும், அரசு வழங்கிய மாற்று இடங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இத்தகைய எதிர்ப்புகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதியளிப்புகள் மூலம் சமாளிக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி சென்னையின் நதி சீரமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில், அடையாறு ஆற்றின் கரைகளை மீட்டெடுத்து புனரமைப்பதன் மூலம், நகரத்தின் வெள்ள பாதிப்பை குறைக்கவும், நிலையான நகர்ப்புற வாழ்விடத்தை மேம்படுத்தவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.