Advertisment

இனி தான் மழையின் ஆட்டமே இருக்கு; சென்னை நிலவரம் எப்படி? உஷார் படுத்தும் தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் பெரிய மழையே இனிதான் இருக்கு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு; அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்

author-image
WebDesk
New Update
Tamil Nadu Weatherman Pradeep John Kanyakumari Southwest Monsoon Rainfall Updates

தமிழகத்தில் பெரிய மழையே இனிதான் இருக்கு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு; அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் இனி தான் பெரிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. மேலும், ஆரம்பத்தில் குறைவான மழையே இருந்தது. இந்தநிலையில், தற்போது தான் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, “நேற்றைக்கு வட தமிழகத்தில் மட்டும் மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது. ஆனால் இனி வரும் நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 21 ஆம் தேதி வரை 255 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது 17 சதவீதம் குறைவு ஆகும். ஏன் என்றால் வடகிழக்கு பருவமழையால் அக்டோபரில் மிக குறைவான மழையே பெய்துள்ளது.

நவம்பர் மாதத்தில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால் இந்த மாதம் முடிவதற்குள், அதாவது அடுத்த 2 வாரங்களுக்கு தான் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதம் முடிவதற்குள் நல்ல மழை தமிழகத்தில் பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதம் தொடங்குவதற்குள் மழை அளவு மைனஸ் 17 சதவீதம் என்பது ப்ளஸ் ஆக மாறக்கூடும். உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மாத இறுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகிறது, டிசம்பர் முதல் வாரம் முடிவதற்குள் தமிழகத்தில் மழை அளவு என்பது வழக்கத்துக்கு அதிகமாக இருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை இதுவரை 350 மி.மீ முதல் 400 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட குறைந்த அளவு தான். அக்டோபர் மாதத்தில் சென்னையில் 20 சதவீத மழை தான் பெய்துள்ளது. நவம்பரில் நல்ல மழை பெய்தாலும் சென்னையில் மழை அளவு ஓரளவு தான் இருக்கும். தென்மேற்கு பருவமழையில் அதிக அளவு மழை பெய்ததால், சென்னையில் உள்ள நீர் நிலைகள் நல்ல நிலையில் உள்ளன.

இனி வரும் நாட்களில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். மேலும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை அருகே காற்றழுத்த பகுதியோ அல்லது புயலோ இம்மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் காற்றழுத்த நிலை உருவாகினால், நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது உள்ள நிலவரப்படி பார்க்கும்போது சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழையும், இரவு நேரங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இனி வரும் நாட்களில் சென்னை, தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கொங்கு மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 5 நாட்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,” இவ்வாறு பிரதீப் ஜான் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Chennai Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment