தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு, 6 ஆம் வகுப்பு மாணவன் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் தலைமை செயலாளராக உள்ள வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.,க்கு சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் அ.இறையன்பு தன் கைப்பட எழுதி அனுப்பியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: ஜி.எஸ்.டி.,யுடன் இணையும் பெருங்களத்தூர் மேம்பாலம்: இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது: என் பெயர் இறையன்பு. நான் 6-ம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற போவதாக என் பெற்றோர் மூலம் நான் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களைப் போலவே நான் பிறரிடம் அன்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன். நான் வகுப்பில் நன்றாக படிப்பேன். என் அம்மாவின் மூலம் தங்களின் சில நகைச்சுவை கதைகளை கேட்டுள்ளேன்.
ஐயா நானும், எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. நடப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. பலர் வழுக்கி விழவும் நேரிடுகிறது. தயவு கூர்ந்து எங்கள் தெருவுக்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மாணவர் கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் மாணவர் இறையன்பு தன் பெயர் பொறிக்கப்பட்ட ஆதார் அட்டை நகலையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil