தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த மழை மேகவெடிப்பால் பெய்யவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் மாவட்டங்களில் தகவல் தொடர்பு பிரச்னைகள் இதுவரை வரவில்லை. சிறப்பு அதிகாரிகளாக 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஏற்கனவே தென் மாவட்டங்களில் பணி செய்து வருகின்றனர்.
1070 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை சொல்லலாம். இதுவரை 3863 புகார்கள் இந்த எண் மூலம் வந்துள்ளது. அதில் 3732 புகார்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம். 144 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.
தூத்துக்குடி மாநகரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிகளில் மிக கனமழை பதிவாகி உள்ளது. மீட்பு பணிகளுக்காக போதுமான அளவிற்கு படகுகளை தயாராக வைத்துள்ளோம்.
தூத்துக்குடியில் 96 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றன. நெல்லை மாநகராட்சியில் மட்டும் 61 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகங்கள் அவசர உதவியாக கேட்கும் நிலையில் முன்னுரிமை அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல் புறப்படும்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழைப் பொழிவால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது.
நெல்லையில் விரைவில் தண்ணீர் வடிந்து விடும். தூத்துக்குடியில் தண்ணீர் வடிய கொஞ்சம் தாமதமாகலாம். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சூலூர்பேட்டை விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 7,500 பேர் மீட்கப்பட்டு ஆங்காங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 84 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது” என தலைமை செயலாளர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.