தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நடைபெற்று வரும் நேரடி நெல் கொள்முதல் முறைகேடுகள் குறித்து நாளை (மே 27) நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நேரடி நெல் கொள்முதலில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து, நாளை (மே 27) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த அறிவித்திருந்தோம். இது குறித்து அறிந்த தமிழக அரசின் உணவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சத்ய பிரதா சாகு ஐ.ஏ.எஸ். மற்றும் மேலாண்மை இயக்குநர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ். ஆகியோர் இன்று காலை சமாதானக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
பேச்சுவார்த்தையில் நடந்தவை
டிஎன்சிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ். தலைமையில் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு என்ற நிறுவனத்துடன் இடைத்தரகர் ஒப்பந்தம் செய்துள்ள தமிழக அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு (அமுருதீன் ஷேக் தாவூத் தலைமையிலான நிறுவனம்) பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக, 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு ரூ. 65 கையூட்டாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்வதற்கான அடிப்படை வசதிகள், பணியாளர்கள், தொழில்நுட்பம் இல்லாத இந்நிறுவனம், கொள்முதல் செய்த நெல்லுக்கு சுமார் ரூ. 500 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்
பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்படவில்லை.
சில இடங்களில் கொள்முதல் செய்யாமல் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மழையால் நனைந்து போய் உள்ளது.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் முழுப் பொறுப்பையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஏற்க வேண்டும்.
கொள்முதல் செய்ய வேண்டிய நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து, அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் அமுருதீன் ஷேக் தாவூத் தலைமையிலான நிறுவனத்தின் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 500 கோடி தொகையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
அரசின் பதில் மற்றும் உறுதிமொழிகள்
எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மேலாண்மை இயக்குநர் சண்முகசுந்தரம், இனி தனியார் நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்வதற்கு அனுமதி இல்லை என்றும், இதை அரசுக்குப் பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனியார் நிறுவனம் வசம் தற்போதுள்ள 3 லட்சத்து 31 ஆயிரத்து 173 மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளது. இதில் 53 ஆயிரத்து 341 மெட்ரிக் டன் அரிசியை மட்டுமே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்கியுள்ளது. இதற்கான கிரையத் தொகையாக சுமார் ரூ. 210 கோடி தனியார் நிறுவனத்திற்கு NCCF மூலம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் இருப்பு குறித்த கணக்குகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
கொள்முதல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள நெல்லை கையகப்படுத்துவதற்கும், கொள்முதல் செய்து ரசீதுகள் வழங்கப்படாமல் உள்ள நெல் குறித்து கணக்கீடு செய்து தொகையை வழங்குவதற்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளும். இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கொள்முதல் அதிகாரிகள் அவசர கூட்டத்தை நடத்தி முடிவெடுக்க உள்ளனர்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 500 கோடி அளவிலான கிரையத் தொகையை 10 நாட்களுக்குள்ளாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே பொறுப்பேற்று வழங்கும் என மேலாண்மை இயக்குநர் உறுதியளித்தார்.
போராட்டம் ஒத்திவைப்பு
இந்த உறுதிமொழிகளை ஏற்று, நாளை நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை 10 நாட்கள் ஒத்திவைத்து, ஜூன் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது பொதுச் செயலாளர் வி.கே.வி. துரைசாமி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லி ராம், சென்னை மண்டல செயலாளர் ராஜசேகர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் நமச்சிவாயம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்