ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்துவரும் வேலூரைச் சேர்ந்த இளைஞருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேலூரைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் சரவணன் (31) அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கா சென்னையில் சாஃப்ட்வேர் அனலிஸ்டாக பணிபுரிகிறார்.
வேலூரில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடித் தேடிச் சென்று உதவி செய்யும் சரவணன் வேலூர் மக்களிடையே பிரபலமாகியுள்ளார்.
ஐடி ஊழியரான தினேஷ் சரவணன் ஊரடங்கு காரணமாக தற்போது தனது சொந்த ஊரான வேலூரில் உள்ளார். காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் தினேஷ் சரவணன், வேலூரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து அவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான உதவிகளை செய்கிறார். பின்னர், தனது நிறுவனத்துக்காக காலை 10 மணிக்கு வேலையைத் தொடங்கும் சரவணன் இரவு 9 மணிக்கு வேலை முடிக்கிறார். பின்னர், வேலூர் நகரில் ஊரடங்கால் எந்தெந்த பகுதிகளில் மக்கள் யார் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பெடுத்துக்கொண்டு தனது அடுத்த நாள் பணிக்கு திட்டமிடுகிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு அளிக்கும் உதவி போதுமானது இல்லை. அதே நேரத்தில் தன்னார்வலர்கள் சிலர் உணவு, மளிகைப் பொருட்களை வழங்கி வருகின்றனர். தினேஷ் சரவணன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 21 முதல் தனது ஓய்வு நேரங்களில் தனது சொந்த பணத்தைக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
டுவிட்டரில் ஆக்டிவாக இருக்குக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான தினேஷ் சரவணன் தனது மக்களுக்கான தனது உதவிகளை டுவிட்டரில் பதிவிட அவருடைய பதிவைப் பார்த்து அவருடைய செயலுக்கு உதவும் வகையில் பலரும் தங்களால் இயன்றதை நன்கொடையாக அளிக்க முன்வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக வேலூரில் மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் அறியப்பட்டுவந்த தினேஷ் சரவணன் இப்போது வேலூரில் பிரலமாக அறியப்படுகிறார்.
தினேஷ் சரவணன், ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள், சலவைத் தொழிலாளர்கள், சாலையோர பழக்கடை வியாபாரிகள், அவர்களைக் கண்டறிந்து அவர்களின் வீடு தேடி சென்று மளிகைப் பொருட்களையும் உணவுப் பொருட்களையும் அளிக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையோர வியாபாரிகளிடம் பழங்களை வாங்கி 100 தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
தனது பணிகள் குறித்து தினேஷ் சரவணன் கூறுகையில், “மார்ச் 21-ம் தேதி முதல் என்னுடைய சேமிப்பில் இருந்தும் மற்றவர்களிடம் இருந்து வாங்கியும் இதுவரை ரூ.1.50 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவிட்டிருக்கிறேன். நான் யாரிடமும் நன்கொடை தாருங்கள் என்று கேட்கவில்லை. ஆனால், என்னுடைய பணிகளை டுவிட்டரில் பார்த்துவிட்டு சிலர் அவர்களாகவே முன் வந்து பங்களித்திருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலத்தில் சிக்கலில் இருக்கும் மக்கள் உதவிகளைப் பெறும்போது அவர்கள் முகத்தில் தெரிகிற மகிழ்ச்சி எனது செயலை மேலும் தொடர ஊக்கமளிக்கிறது.” என்று கூறுகிறார்.
ஐயா தங்களின் இந்த பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மேலும் செய்ய உந்துதலாக இருக்கிறது. என் கடைசி மூச்சு உள்ளவரை சமூகப் பணி தொடரும் ஐயா, மிக்க நன்றி! Made my day.. @CMOTamilNadu https://t.co/qC6DTyn7gE
— Dinesh Saravanan (@sdineshsaravana) April 25, 2020
தினேஷ் சரவணனின் பணிகளை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தினேஷ் சரவணனைப் பாராட்டி முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஐ.டி நிறுவனத்தில் வேலை புரிகின்ற போதும், கிடைக்கின்ற நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வோடு, கடைக்கோடி மக்களை தேடி உதவுதல், மரக்கன்று நடுதல் என தாங்கள் பல்வேறு சேவைகள் செய்து வருவதை சமூக வலைதளம் மூலம் அறிந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள தினேஷ் சரவணன், முதல்வரின் பாராட்டு உற்சாகம் அளித்திருப்பதாகவும், மேலும் மக்கள் பணி செய்ய உந்துதலாக இருப்பதாகவும் கடைசி மூச்சு உள்ளவரை சமூகப்பணி தொடரும் என்று கூறியுள்ளார்.
வேலூரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் சரவணன் 2014-ம் ஆண்டு முதல் தனது சமூக சேவையைத் தொடங்கினார். அவர் இதுவரை வேலூரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 18,000 மரக் கன்றுகளை நட விநியோகித்துள்ளார். 16வயது வரை தனது வீட்டில் கழிப்பறை இல்லாமல் இருந்த தினேஷ், இன்று ஏதுமற்ற ஒரு குடும்பத்திற்கு கழிப்பறை கட்ட உதவி செய்துள்ளார்.
“எனது அண்ணன் தனது ஓய்வு நேரத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிட்டு வந்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு நான் அவரிடமிருந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். மற்றவர்களுக்கு உதவுவது மிகவும் திருப்தியாக இருக்கிறது. பல ஆண்டுகளாக நான் புரிந்துகொண்டது என்னவென்றால், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே முக்கியம். உங்களுக்கு ஒரு நோக்கம் கிடைத்தவுடன், நீங்கள் அதற்கான வழிகளையும் கண்டுபிடிப்பீர்கள்” என்கிறார் தினேஷ் சரவணன்.
ஆரம்பத்தில் தினேஷ் சரவணன் 2014-ம் ஆண்டு முதல் மற்றவர்களுக்காக ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்திலிருந்து 5,000 ரூபாயை ஒதுக்கி உதவி செய்து வந்துள்ளார். ஆனால், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற அவரது ஆர்வத்துக்கு அது போதுமானதாக இல்லை. மக்கள் அவரது பணிகளைப் பற்றி தெரிந்துகொண்டிருந்தார்கள். இதையடுத்து, தனது உதவிகளையும் தினேஷ் சரவணன் அதிகரித்தார்.
அது பற்றி தினேஷ் சரவணன் கூறுகையில், “சென்னையில் எனது செலவுகள் போக, மக்களுக்காக நான் ஒதுக்கி வைக்கக்கூடிய பணம் மட்டும் போதாது என்பதால் அதற்கு மக்களும் பங்களிக்கத் தொடங்கியபோது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. யாராவது பணம் நன்கொடை அளித்தால், செலவுகளையும் பணிகளையும் நான் பொதுவெளியில் தெரிவிப்பேன்” என்று தினேஷ் தனது மக்கள் பணிகளை அவர் கூறினார்.
லாக்டவுன் காலத்தில் வேலூரில் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வீடு தேடிச் சென்று உதவும் தினேஷ் சரவணனை அப்பகுதி மக்கள் நன்றியுடன் பார்க்கின்றனர். அவரது சமூக சேவைக்கு அங்கீகாரமாக முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.