Edappadi Palaniswami Mother Passes Away: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. இதைத் தொடர்ந்து முதல்வரின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவசரமாக சேலம் சென்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் (93). இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தில் வசித்தார். இவரது கணவர் கருப்ப கவுண்டர் ஏற்கனவே இறந்து விட்டார்.
எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது சேலம் சென்று தனது தாயாரை சந்தித்து வருவது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமை (12-ம் தேதி) இரவு 11 மணியளவில் வயோதிகப் பிரச்னைகள் காரணமாக தவசாயிஅம்மாள் மரணம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த அவர் தனது தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக சேலம் திரும்பினார்.
தவசாயி அம்மாளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும், ரஞ்சிதம்(எ)விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். முதல்வரின் தாயார் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி:
மு.க ஸ்டாலின்:
”முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன்.அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம்” இரங்கல்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஜி.கே.வாசன் இரங்கல். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல்.
முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு தமிழக அளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்.
”முதல்வரின் தாயார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்” பாரிவேந்தர் எம்.பி.இரங்கல்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"