அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நாசா விண்வெளி மையத்திற்கும், அறிவியல் மாநாட்டிற்கும் அழைக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆன்லைன் தேர்வின் மூலம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு படித்து வரும் அபிநயா என்ற பள்ளி மாணவி நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல தேர்ச்சி பெற்றார். கருப்பட்டிபாளையத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சசிகலா தம்பதியின் இரண்டாவது மகளான அபிநயா சிறு வயது முதலே அறிவியல் பாடங்களில் ஆர்வம் காட்டினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அமெரிக்கா செல்லும் பயணச் செலவிற்காக இரண்டு லட்சம் வழங்கி ஊக்குவித்தார். இந்நிலையில், முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து மேலும் இரண்டு லட்ச ரூபாய் அபிநயாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதையொட்டி, அபிநயாவின் சாதனையினை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், அவருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்நிலையில், மாணவி அபிநயா மின்சாரத்துறை அமைச்சருக்கும், முதல்வருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.