ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்படும் உயிரிழப்பை பற்றியும், அந்த விளையாட்டை தடை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
இதைப்பற்றி உங்களில் ஒருவன் பதில்களில் தெரிவித்த அவர், "ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி, மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களில் வருகிறது.
தன்னுடைய மகன், ஆன்லைன் ரம்மி விளையாடியதற்காக வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டு, அந்த தாய் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை வியாசர்பாடியில் இந்த சோகம் அரங்கேறியுள்ளது. அவரது மகன் தலைமறைவு ஆகிவிட்டான். இது ரம்மியால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு உதாரணம் ஆகும்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ் கான் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்திருக்கிறார்.
இதனால் மனம் உடைந்து காவேரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது இரண்டாவது உதாரணமாகும்.
சேலம் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது மூன்றாவது உதாரணம் ஆகும்.
மதுரையில் குணசீலன் என்கிற கல்லூரி மாணவன், இதே பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டார்.
இவை அனைத்தும், கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை ஆகும். இவையெல்லாம் தமிழக ஆளுநருக்கு தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்?
இப்படி ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார், ஆளுநர்.
அமைச்சர் அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதே சட்டத்தை சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் மூன்று மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் இருப்பது மர்மமாக தெரிகிறது.
இதில் என்ன கொடுமை என்றால், ஆன்லைன் விளையாட்டில் வெல்லக்கூடிய தொகைக்கு அரசாங்கம் வரி போடுகிறது தான். ஒன்றிய நிதி அறிக்கையில் இவை இடம்பெற்றிருக்கிறது.
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யாமல், அதை அங்கீகரிக்கும் வகையில் வரி போடுபவர்களை என்ன சொல்வது?", என்ற கேள்வியுடன் தனது கருத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.