தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் நேற்று அவர் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களாகவே முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. மேலும், இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை தொடக்க நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இருமலும் சற்று உடல்நல பாதிப்பு இருந்த நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் ENT ஆராய்ச்சி மையத்தின் (Madras ENT Research Foundation - MERF) தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அதனையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அவருக்கு வைரல் காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால், முதலமைச்சர் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“