முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வின் எம்.எல்.ஏ.க்களுடன் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநரின் கருத்துக்கு விமர்சனம் செய்தோ, ஆளுநரின் கருத்தை தாக்கியோ சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசக்கூடாது என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதுவே இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், நேற்றைய தினம் ஆளுநரின் உரையுடன் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒருசில வார்த்தைகளை தவிர்த்து பேசியிருந்தார். குறிப்பாக திராவிடம் மாடல் ஆட்சி என்கிற விஷயத்தை ஆளுநர் பேசவில்லை. அதை போல, நேற்று தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்கிற விஷயத்தையும் கூறியிருந்தார்.
மேலும், தந்தை பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட விஷயங்களை ஆளுநர் தனது உரையில் குறிப்பிடவில்லை. ஆளுநரின் நேற்றைய செயல்பாடு என்பது அரசியல் வட்டாரத்தில் பெரியளவில் விவாதப்பொருளாக மாறியிருக்கும் நிலையில், இன்றைய தினம் திமுகவின் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
குறிப்பாக மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கக்கூடிய சட்டபேரவை கூட்டத்தொடரில், எதிர் காட்சிகள் எழுப்பக்கூடிய விவாதங்கள் மற்றும் கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil