scorecardresearch

துபாய் தீ விபத்தில் 2 தமிழர்கள் மரணம்: தலா ரூ 10 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ருபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” – முதல்வரின் அறிவிப்பு

mk stalin

துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதைப்பற்றி, முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,”துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. இமாம் காசீம், தந்தையின் பெயர் அப்துல் காதர் (வயது 43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த திரு. குடு (எ) முகமது ரபிக், த/பெ சலியாகுண்டு (வயது 49) ஆகிய இருவரும் 15.04.2023 அன்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ருபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்”, என்று மக்கள் தொடர்புத்துறையின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu cm mk stalin offers rs 10 lakhs for each family dubai fire accident