Advertisment

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொடர்ச்சி நான் - மு.க.ஸ்டாலின்

49 நாட்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்கட்சி தலைவருக்கு நன்றி என்று முக ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டார் முதல்வர் .

author-image
WebDesk
New Update
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொடர்ச்சி நான் - மு.க.ஸ்டாலின்

Tamil Nadu CM MK Stalin : தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று, திமுக ஆட்சி அமைத்த பிறகு அவர்களின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்று முடிந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கினார் முதல்வர் முக ஸ்டாலின்.

Advertisment

21ம் தேதி அன்று சட்டமன்றத்தில் தமிழக அரசின் நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக் கூடிய உரையை ஆளுநர் வழங்கினார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் உரை விவாதத்தில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. குளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கும், அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும், தோழமை கட்சியினருக்கும், சேவை அளிக்க வாய்ப்பினை வழங்கிய அருந்தமிழ் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தன்னுடைய பதிலுரை வழங்கினார்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி 1920 முதல் 1937ம் ஆண்டு வரையான 17 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தை தகர்த்து, மகளிருக்கான உரிமைகளை அங்கீகாரம் செய்து அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தந்து, கல்விதுறையில் சீர்திருத்தங்களை புகுத்தி, சமுதாய மாற்றங்களுக்கு விதைகளை விதைத்து சமூக நீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி. ஆங்கிலேயர்களின் இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்ட அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்கு திட்டங்களையும், அக்காலத்தில் எவரும் சிந்தித்திடாத சீர்திருத்தங்களை நிறைவேற்றிய கட்சி. திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியில் அமர்ந்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. நூறாண்டுகள் நிறைவடைந்த தருணத்தில் திமுக ஆட்சி அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் கூறினார். குறைவான அதிகாரங்களை கொண்டே வகுப்புவாரி உரிமைகளை நிலை நாட்டியது நீதிக்கட்சி.

தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும் போட்ட சமூக நீதி, சமத்துவ சமுதாய அடித்தளத்தில் அமைந்தது தான் இந்த ஆட்சி. 1967ல் முதன்முறையாக ஆட்சி பொறுப்பில் திராவிட முன்னேற்ற கழகம் அமர்ந்த போது நீதிக்கட்சியின் தொடர்ச்சி தான் இது என பேரறிஞர் அண்ணா கூறினார். அதே வழியில் எங்களின் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி தான் என்பதை பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான். என்னுடைய அரசு. தமிழினத்தை நம்மால் தான் வாழ வைக்க முடியும் வளரவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள் மக்கள். இந்த அரசின் கொள்கைகளை, தமிழக அரசு எட்டவேண்டிய இலக்கை, எமது தொலைநோக்கு பார்வையை தான் ஆளுநர் தன்னுடைய உரையில் கோடிட்டு காட்டினார்.

நீதிக்கட்சியின் முதல் பிரதமராக இருந்த சுப்புராயலு ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பொறுப்பேற காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோரையும், முதல்வராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுவது என்னுடைய கடமையாகும். நம் முன்னோர்களை நினைவு கூறுவது என்பது தமிழ் பண்பாட்டின் தவிர்க்கமுடியாத முக்கியமான கூறு என்பதை மறுந்துவிட முடியாது. 2 நாட்களாக அவையில் நடைபெற்ற விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, விசக, பொதுவுடமை கட்சிகள், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளை சேர்ந்த 22 மாண்புமிகு உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது தங்களின் சீரிய கருத்துகளை மையப்படுத்தி உரையாற்றியுள்ளார்கள். உங்கள் அனைவரின் கருத்துகளையும் நீங்கள் இந்த அரசுக்கு சொல்லும் ஆரோக்கியமான ஆலோசனைகளாகவே எடுத்துக் கொள்கிறேன். ஏன் என்றால் பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு. முத்தமிழ் கலைஞரின் கொள்கை வாரிசு.

சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது முன்வைத்திருக்கும் கோரிக்கைகள், தொகுதிசார் பிரச்சனைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிக் கொள்கிறேன். 5 ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசு இந்த அரசு. செயல்படுத்தக் கூடிய திட்டங்கள், கொள்கைகள், கோரிக்கைகள் ஆகிய அனைத்தையும், ஆளுநர் உரையில் மட்டுமே கூறிவிட இயலாது. ஆளுநர் உரை என்பது அரசின் ஓராண்டுக்கான கொள்கை விளக்க சுருக்கம் மட்டும் தான். அதில் அரசின் ஐந்து ஆண்டுகளுக்கான நோக்கம், திட்டம், செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம் தான். இது ஒரு ட்ரெய்லர் மாதிரி. இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ள இருக்கும் பயணம், பயணத்தில் எதிர்கொள்ள இருக்கும் இடர்பாடுகள், அதனை தகர்த்தெறியும் சூட்சமங்கள், சவால்கள் அவற்றை சந்திப்பதற்கான சாதுர்யங்கள், என அனைத்தும் பேரவையில் வைக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம் பெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர்.

பொறுத்தார் பூமி ஆள்வார். நாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம். இப்போது தான் ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். உங்களுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர். நாங்கள் ஆட்சிக்கு வந்து 49 நாட்கள் ஆகியுள்ளது. ஆனாலும் என் மீதும் திராவிட முன்னேற்ற கழக அரசின் மீதும் இருக்கும் நம்பிக்கை காரணமாக இப்போதே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்கட்சி உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் முதல்வர்.

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஆட்சியில் அமர்ந்த முதல் நாளில் இருந்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம். அதற்கான பணிகளில் எங்களை ஒப்படைத்துள்ளோம். பதவிப்பிரமாணம் செய்து, பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றம் சென்றேன். கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்க உத்தரவிடப்பட்டது. முதல் தவணை மே மாதம் வழங்கப்பட்டது. கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று மேலும் ரூ. 2000 வழங்கப்பட்டது. மொத்தம் 8393 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 16 லட்சம் குடும்பங்கள் வழங்கப்பட்டது.

ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ. 3வரை குறைத்துள்ளோம்.

அனைத்து மகளிரும் நகர பேருந்துக்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய உத்தரவிட்டோம். தற்போது திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது.

நான் பெற்ற மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள புகார்களை 100 நாட்களில் தீர்த்து வைக்க உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று காலை வரை 75, 546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான கட்டணத்தை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசே ஏற்க உத்தரவிட்டோம். இதனால் 20520 பயனடைந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்கப்பட்டது. 47 நாட்களில் 65 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளை விட இரண்டு மடங்கு அதிகம்.

போர்கால நடவடிக்கைகள் காரணமாக 7000க்கும் கீழே கொரோனா தொற்று குறைந்துள்ளது. புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டன. ஆக்ஸிஜன் வசதிகள் கொண்டவையாக தீவிர சிகிச்சை பிரிவு மாற்றப்பட்டது. 89618 புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலையை தாங்கி எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு உள்ளது.

கொரோனா தடுப்பு பிரச்சனைகள் குறித்து அனைத்து கட்சிகளும் தங்களின் உறுப்பினர்கள் மூலம் தொடர்ந்து ஆலோசனைகளை அரசுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது கட்சி பிரச்சனை இல்லை. ஆட்சியின் பிரச்சனை இல்லை. மக்கள் பிரச்சனை. மக்களின் நலன் சார்ந்த பிரச்சனை. கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அரசு என்று கூறிக் கொள்கிறேன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், மக்களுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளான 17 பேருக்கு, கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் 94 காயம்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்க அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஃபாஸ்டர் நிறுவனத்தையும் மீண்டும் இயக்க பிரதமரை வலியுறுத்தியுள்ளோம்.

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதி, மாதாந்திர பராமரிப்பிற்காக ரூ. 3000. ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிதியாக ரூ. 3 லட்சம் வழங்கியுள்ளோம்.

மாத ஊதியமன்றி கோவில்களில் பணியாற்றக் கூடிய அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு ரூ. 4 ஆயிரம், முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, திருநங்கையருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் உயிரிழந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 250 கோடி மதிப்பில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 70 கோடி மதிப்பில் கலைஞர் பெயரில் மதுரையில் மாபெரும் நூலகம் அமைக்க ஏற்பாடும், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் நெல் சேமிப்பு கிடங்குகள் - உலர்களங்கள் அமைக்கப்படும்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து மதிப்பீடு செய்ய ஓய்வுபெற்ற நீதி அரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் ஆணையம், தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவக்ரள் சேர்க்கையை அதிகரிக்க ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநில வளர்ச்சிக்குழுவில் பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 8 ஆளுமைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment