சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அங்கு உரையாற்றிய அவர், “கள்ளம் கபடம் இல்லாத பள்ளிக் குழந்தைகளின் முகத்தைக் காண்பதில் இருக்கக்கூடிய உற்சாகத்தை பார்க்கிறபோது அதைவிட வேறு மகிழ்ச்சி வேறு எதுவும் இருந்துவிட முடியாது என்று கூறினார்.
மேலும், பெண் கல்வியை ஆணித்தரமாக வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், நாட்டிலேயே தரமான கல்வியை வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பழமைவாத கருத்துக்களை மீண்டும் சமூகத்தில் விதைக்க, சிலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெண்களை வீட்டுக்குளேயே முடக்க வேண்டும், போராடி உரிமைகளை பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து அந்த உரிமைகளை திரும்ப பெற நினைக்கிறார்கள்.
அவர்களின் இந்த பிழைப்புவாத கருத்துக்களை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு முன்னேற்றத்தை நோக்கி செல்லவேண்டும்”, என்றார்.