ஃபீஞ்சல் புயலால் பெருமளவும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.
வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கி, அன்று இரவு 12 மணியளவில் கரையைக் கடந்தது. இதனால் ஏற்பட்ட கனமழையினால் விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்புகளை சந்தித்தது.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது மட்டுமின்றி கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 49.29 செ.மீ மழை பதிவானது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது. அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. மேலும், மின்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் சென்று மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்கிறார். அதன்படி, சென்னையில் இருந்து இன்று விழுப்புரம் செல்லும் அவர், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.
முன்னதாக, நேற்றைய தினம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களையும் அவர் வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“