Advertisment

1,06,50,000 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஸ்டாலின் அறிவிப்பு; அதிகாரிகளுக்கு முக்கிய கட்டளை

1 கோடிக்கும் மேலான குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்

author-image
WebDesk
New Update
Kalaignar Magalir Urimai Thogai Scheme

1 கோடிக்கும் மேலான குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்

ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.9.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான 15.9.2023 அன்று தொடங்கவுள்ளதையொட்டி அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் - ஆயிரம் ரூபாயை மாதமாதம் - ஆண்டுதோறும் பெறப் போகிறார்கள்.

அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும்-அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளாகிய உங்களுக்கு இருக்கிறது.

ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம்.

அதேபோல்தான் சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கிடைக்கும் கெட்டபெயரும், என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே எந்த இடத்திலும் - எந்தச் சூழலிலும் - எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறு கூட நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருவதை, தற்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

ஏ.டி.எம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏ.டி.எம் கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல், வரும் 15-ஆம் தேதி என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free (கட்டணமில்லா) எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 83 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்.

அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள். சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம் - மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

வருகிற 15-ஆம் நாள் அன்று மாவட்டத் தலைநகரங்களில் இதற்கான விழா நடக்க இருக்கிறது. பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, ’நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்பதை சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இது மிகமிக முக்கியமாகும்.

இதைச் செய்யாவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும், அந்த மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும். அதனால் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கும் வங்கிகளுக்கும் – வங்கிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும். மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்த திட்டத்திற்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது. எனவே, இத்திட்டம் குறித்து தொடர்ந்து நாம் மக்களிடம் எடுத்துச்சொல்லி வர வேண்டும்.

*மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்

*முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்

*புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவியருக்கு 1000 ரூபாய்

*இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டம்

*மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் கலைஞர் உரிமைத் திட்டம் - ஆகிய 5 திட்டங்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அதை முறையாகச் செயல்படுத்தினாலே, அதனால் பயனடைந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு நம்மைப் பாராட்டி பேசுவார்கள்.

அத்தகைய பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தரும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், நிதித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் க.இளம்பகவத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment