Advertisment

மையப்படுத்தப்பட்ட தேர்வு முறைக்கு முடிவு காலம்; முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்புக்கு ஸ்டாலின், அன்புமணி கண்டனம்

நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்; முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்புக்கு ஸ்டாலின், அன்புமணி கண்டனம்

author-image
WebDesk
New Update
stalin anbumani

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்புக்கு ஸ்டாலின், அன்புமணி கண்டனம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இன்று (ஜூன்.23) நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று இரவு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நாளை (இன்று) நடைபெற இருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்த சமீபத்திய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் முதுநிலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முதுநிலை மருத்துவ நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

“யூ.ஜி.சி நெட் தேர்வு (UGC-NET) ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வை (NEET-PG) தேசிய மருத்துவ தேர்வு வாரியம் (NBE) ரத்து செய்தது, நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை ஆழ்ந்த விரக்தியில் தள்ளியுள்ளது. இந்த நிகழ்வுகள் ஒரேயடியான நிகழ்வுகள் அல்ல, ஆனால் திறமையற்ற மற்றும் உடைந்த மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின் சவப்பெட்டியின் இறுதி ஆணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த மோசடி அவிழ்க்கப்படுகையில், ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக திட்டமிடுவோம், நம் கைகளைக் கோர்த்து ஒன்றிணைவோம் 

- தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவதற்கு.

- பள்ளிக் கல்வியின் முதன்மையை உறுதி செய்வதற்கும், அதை தொழில் வாழ்க்கைக்கு அடிப்படையாக மாற்றுவதற்கும். 

- தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக. 

- மிக முக்கியமாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் நம்பிக்கை மற்றும் உண்மையை மீண்டும் நிறுவுவதற்கு.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யுங்கள்!

இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. 

நீட் தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை. 

முதுநிலை நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பலருக்கு மாநிலம் விட்டு மாநிலம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் இரு நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு தேர்வு மையம் உள்ள ஊரில் தங்கியிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சம் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை 3 நாட்களுக்கு முன்னதாக எடுத்திருந்தால் கூட இந்த மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம். 

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அதை போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin Anbumani Ramadoss NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment