உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ரூ.16000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நாளை (டிசம்பர் 7) தொடங்குகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கும், இந்த மாநாட்டில் 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பதிவு செய்துள்ளனர். இதேபோல் 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு கொள்வார்கள்.
இந்தநிலையில், நாளை தொடங்கும் இந்த மாநாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் ஆலை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதனால் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.
இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!
தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!
தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“