சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:
நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.
அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.
தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.
நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“