சொல்லிக்கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து விட்டார் பிரதமர் மோடி என பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்த கருத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் சில அரசியல் கட்சிகளால், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆள் இல்லை. பேருந்துகள் அதிகம் இயக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது என்று பேசினார்.
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தான் பிரதமர் மோடி இந்த திட்டத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, பேசியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ”வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் – சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும் – இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. உத்தர பிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடிய இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.
மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை - பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.
உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் – சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும் – ஊக்குவிப்பதும் பா.ஜ.க.தான்.
பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக்கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.
பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது.
பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!” இவ்வாறு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!”
— DMK (@arivalayam) May 18, 2024
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அறிக்கை.
வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப்… pic.twitter.com/Bw3P8ZT1so
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.