கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சிலின் 30ஆவது கூட்டம் சனிக்கிழமை (செப்.3) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, “பயணிகளின் போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை போன்ற இடங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் பாதையை உருவாக்க வேண்டும்” என மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
மேலும், “இந்தப் புதிய முயற்சி நாட்டில் கார்பன் பயன்பாட்டை குறைக்கும் என்றும் மாநிலங்களின் பொருளாதாரத்தை செழுமைப்படுத்தும்” என்றும் மு.க. ஸ்டாலின் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பில் தீவிர கவனத்துடன் செயல்படுகிறோம் என்றும் மத நல்லிணக்கத்தை திறம்பட பராமரித்து வருவதாகவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து, “தென்மாநிலங்களின் உளவுத் துறை தலைவர்கள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து மின்சார திருத்த சட்ட மசோதா 2022-ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என்றார்.
ஜிஎஸ்டி குறித்து பேசுகையில், “அதன் இழப்பீட்டு காலத்தை அரசு 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும் என்றார். பின்னர் அடுத்த ஆண்டு தென்மண்டல பாதுகாப்பு கவுன்சிலை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”