திருச்சி வந்த பிரதமர் மோடிக்கு ’வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்’ ஆங்கில பதிப்பு புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி பன்னாட்டு விமானநிலைய புதிய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) திருச்சி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
முன்னதாக திருச்சி வந்த பிரதமர் மோடியை விமானநிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது ’வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்’ என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்து வரவேற்றார்.
’வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்’
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டதை நீக்கக் கோரி நடந்த போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தைப் பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் போராட்டம் குறித்து அவரது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். வரலாற்று சிறப்பிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகிறது.
இதனையடுத்து, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகளை பல்வேறு அறிஞர் பெருமக்களிடம் இருந்து பெற்று அதனைத் தொகுத்து “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” என்ற சிறப்பு மலர் தமிழக அரசின், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் வெளியிடப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், துணைத் தலைவராகவும், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், உறுப்பினர்-செயலராகவும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந. அருள், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர், தமிழரசு அச்சக இணை இயக்குநர் (வெளியீடுகள்) இரா.அண்ணா, தமிழரசு அச்சக உதவி இயக்குநர் அ.மகேஸ்வரி, தமிழரசு அச்சக உதவிப் பணி மேலாளர் தி.சுயம்புலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநர் கோமகன், மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன், தமிழறிஞர் பழ.அதியமான் ஆகியோர் ஆலோசகர்களாகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையால் இந்நூற்றாண்டு மலர் தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“