/indian-express-tamil/media/media_files/2025/10/09/stalin-kovai-startup-2025-10-09-14-04-05.jpeg)
கோவை கொடிசியா வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (ஸ்டார்ட் அப் தமிழ்நாடு) சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாடு இன்று (அக்டோபர் 9) துவங்கியது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஸ்டார்ட் அப் இகோ சிஸ்டம், ஸ்டார்ட் அப் விஷன் 2035 ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் பல்வேறு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தொழில் முனைவோர்களுக்கான தொழில் முதலீட்டிற்கான ஒப்புதல் கடிதங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட பங்கேற்பளர்கள் பங்கேற்றுள்ளன. இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஒன்றிய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள், தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் பங்கேற்றுள்ளன.
மாநாட்டில் 750 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தயாரிப்புகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75 க்கும் மேற்பட்ட தொழில் வளர்மையங்கள், 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதலீட்டாளர்களுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்திப்புகள், 315 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் பல்வேறு அரங்குகளில் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் கூறியதாவது, ‘’துபாய், பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பங்கேற்பளர்கள் பங்கேற்றுள்ளன. மாநாட்டில் 1000 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தயாரிப்புகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை புத்தொழில் சூழல் கொண்ட மாநிலமாக மாற்றும் வகையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பை முதலமைச்சர் உருவாக்கினார். அவர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஸ்டார்ட் அப் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஸ்டார்ட் அப் துறையில் தமிழ்நாட்டை உலகளவில் முதலிடத்திற்கு கொண்டு வர ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, ‘’அமைச்சர் அன்பரசு சிறு, குறு தொழிலுக்கு சிறந்த அரசு என பெயர் வாங்கி தந்துள்ளார். இந்த மாநாட்டினை கோவையில் நடத்துவது மிக மிக பொருத்தமானது. தொழில்துறை வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மாநில வளர்ச்சிக்கும் உதவும். தொழில் வளர்ந்தால், மாநிலம் வளரும். வேலைவாய்ப்புகள் மூலம் குடும்பங்கள் பயன்பெறும். வளர்ச்சியின் அடையாளமாக தொழில்கள் உள்ளன. அமைதியான சட்டம் ஒழுங்கு உள்ள மாநிலத்தை தேடித்தான் தொழில்துறையினர் வருவார்கள். நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்ற நம்பிக்கையில் தான் இத்தகைய மாநாடுகள் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு எண்ணற்ற தொழில் திட்டங்களையும், அதிக வேலைவாய்ப்பு தரும் தொழில்களையும் ஈர்த்துள்ளது.
2030க்குள் 1 டிரியல்லன் டாலர் பொருளாதார இலக்கு அடைய நமது அரசு முனைப்போடு செயல்படுகிறது. இதில் பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறுகுறு தொழில், புத்தாக்க தொழில்களும் முக்கிய பங்காற்றுகின்றன. புதிய தொழில்நுட்பங்கள், புதிய சிந்தனைகள் தொழில்களுக்குள் வர வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் புத்தொழில் விழிப்புணர்வு பரவ வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்காக உள்ளது. அதற்காக பல முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
புத்தொழில் மற்றும் புத்தாக்கத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவது தான் திராவிட மாடல் அரசின் கனவு. அதற்காக புத்தொழில் மாநாடு ஒருங்கிணைத்து நடத்துகிறோம். புத்தொழில் மற்றும் புத்தாக்கம் விளிம்பு நிலை மக்கள் உள்ளிட்ட அனைவருக்கு சேர வேண்டுமென திட்டமிடுகிறோம். புத்தொழில் துறையிலும் சமூக நீதி இருக்க வேண்டுமென செயல்படுகிறோம். புத்தொழில் சூழலில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு 2032 ஆக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்தை தாண்டி உயர்ந்துள்ளது. இதில் பாதி பெண்கள் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்டார்ட் அப் துறையில் கடைசி இருந்த தமிழ்நாடு, 4 ஆண்டுகளில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது. 2024 உலகாளவிய புத்தொழில் அறிக்கையில் ஆசிய அளவில் 18 வது இடத்தில் சென்னை உள்ளது
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கையில் 36% கூட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. இது தேசிய சராசரியான 11 சதவீதத்தை விட 3 மடங்கு அதிகம். 2021-24 ல் சென்னையை மையமாக கொண்ட உயர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 66% கூட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. இது தேசிய அளவில் இரண்டாவது இடமாகும். புத்தொழில் நிறுவன வளர்ச்சி மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சேர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கும் வகையில் டேன்சீட் என்ற திட்டத்தில் ஆதார நிதி வழங்குகிறோம். அதில் பெண்களுக்கு 50% கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த துறையாக இருந்தாலும் சமூக நீதி முக்கியம். பட்டியல், பழங்குடியினருக்கு பங்கு முதலீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு துறை சார்ந்த பயிற்சிகளும் வல்லுநர்களால் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். முதலீட்டாளர் இணைப்பு தளம் கடந்தாண்டு உருவாக்கப்பட்டுள்ளது. துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.
இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளன. கண்காட்சியில் 21 நாடுகளை சேர்ந்தவர்கள் அரங்கு அமைத்துள்ளனர். தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் செயல்படும் பெருநிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் துறையினை வலுப்படுத்தும் வகையில் ரூ. 100 கோடி செலவில் இணை உருவாக்க நிதியம் உருவாக்கப்படும். இதில் தமிழ்நாடு அரசு முதலீடு செய்யும்.
தமிழ்நாட்டில் நீளமான அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளேன். தங்கநகை உற்பத்தியாளர் கோரிக்கை ஏற்று தங்க நகை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்ட உள்ளேன். அடுத்த மாதம் செம்மொழி பூங்கா திறக்க உள்ளோம். கோவையில் பெரியார் நூலகம், கிரிக்கெட் மைதானம் வர உள்ளது கோவை வளர்ச்சிக்கு உறுதுணையாக திராவிட மாடல் அரசு இருக்கும்” இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உகாண்டா அமைச்சர் மோனிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.