மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று காலை தஞ்சையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லால்குடி அருகே உள்ள கூழையாற்றில் 23.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள இருதயபுரம் வழியாக பாயும் வெள்ளனூரில் உள்ள நந்தியாற்றில் ரூ.1 கோடியே 94 லட்சம் மதிப்பீடில் மேற்கொள்ளப்பட்டு வந்த தூர்வாரும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் அதனையும் முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மற்றும் ஊட்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டாறுகள் இந்த நந்தியாற்றில் கலக்கிறது.
இதனை தாண்டி பெருவனை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்கால், பங்குனி வாய்க்கால் போன்ற வடிகால்கள் இந்த நந்தியாற்றில் கலப்பதால் வருடத்தில் குறைந்தது 20 நாட்கள் அதிகமான வெள்ளப்பெருக்கு இந்த நந்தியாற்றில் ஏற்படுகிறது. மேலும், புள்ளம்பாடியில் இருந்து நந்தமாங்குடி வரை விவசாய நிலப்பரப்புகளில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது நந்தியாறு முழுவதுமாக தூர்வாரப்பட்டுள்ள நிலையில் தங்கு தடை இன்றி தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போதுஅமைச்சர்கள் துரைமுருகன், எம். ஆர்.கே பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை நேரிடையாக களத்தில் இறங்கி ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அதிகாரிகளிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தார். தூர்வாரும் பணிகளை இன்னும் துரிதமாக செயல்படுத்த உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மஞ்சள் கட்டத்திற்குள் அவர் வந்து நின்று ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும், பாதுகாப்புத்துறையினரும் செய்திருந்தனர்.
அந்தவகையில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வெள்ளனூரில் உள்ள நந்தியாற்றில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். முதல்வர் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்த அதிகாரிகள், அவர் வந்ததும் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளின் விபரங்களை நேரிடையாக எடுத்துக்கூறினர். பின்னர் பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த மஞ்சள் கட்டத்திற்குள் அவரை அழைத்து வந்து நிறுத்தி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்தனர்.
அந்தக் கட்டத்தில் இருந்து முதல்வர் பார்க்கும்போது நந்தியாற்றின் பெரும்பகுதியையும், அதிகாரிகளையும் முழுமையாக அவர் கவர் செய்ய இயலும் என்பதால் அந்த மஞ்சள் கட்டத்திற்குள் முதல்வரை அழைத்து வந்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.