தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) சந்தித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம்பெற உள்ளது. அதன்படி, ஆளுநரிடம் ஒப்புதல் பெறும்பொருட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. மாலையில் நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாகவும், மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவைச் சுட்டிக்காட்டினர்.
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக இருவரும் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பத்து நாட்களுக்கு முன்பு மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தமிழகத்தில் அப்போது மழை, வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் இருந்ததால் அந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக அப்போது சந்திப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார். 10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால் அதை ஆளுநர், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார். முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பான கோப்புக்களுக்கு அனுமதி கோரியுள்ளோம். அண்ணாவின் பிறந்தநாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புக்களுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை. நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி தருமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம். கோரிக்கைகளை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.