Tamilnadu CM News Update : ஆண்டு தோறும் ஆடி மாதங்களில் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் வார்ப்பது வழக்கம். மக்களிடம் இருந்து பெறப்படும் தானியங்கள் மற்றும் கோவில்களுக்கு கிடைக்கும் நிதி ஆகியவற்றை வைத்து இந்த கூழ் வார்த்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவில்களை நடை அடைக்கப்பட்டதால், கோவில்களின் வருமானம் குறைந்துள்ளது. மேலும் ஊரடங்கின் காரணமாக மக்களிடமும் போதிய அளவு வருமானம் இல்லை என்பதால், கூழ் வார்க்கும் நிகழ்வு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழக அரசு கூழ் வார்க்கும் நிகழ்வுக்கு தானியங்கள் வழங்க வேண்டும் என்று கோவில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராமப்புற கோவில்களுக்கு ஆடி மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான தானியங்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவித்துள்ள கோவில் பூசாரிகள் நலச்சங்க சார்பில் மாநில தலைவர் பி.வாசு பூசாரி அறிக்கையில்,
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சிறிய கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்த்தல் நிகழ்ச்சிக்கு போதிய தானியங்கள் கிடைப்பதில்லை. கோவில்களிலும் தானியங்கள் வாங்கும் அளவுக்கு போதிய வருமானமும் இல்லை. நோய் தொற்று பரவல் காரணமாக கோவில் நடைசாற்றப்பட்டதால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கோவில்களுக்கு வருவாய் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கிராமப்புற கோவில்களுக்கு ஆடி மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான தானியங்களை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதற்காக தமிழக முதல்-அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அறநிலையத்துறை கமிஷனர் ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil