அனைத்து கட்சி கூட்டத்தில் கவுரவம் பார்க்காமல் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும் – ஸ்டாலின்

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாகப்பட்டினம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
stalin nagappattinam

தொகுதி சீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் கூட்டப்படவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கவுரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் பிறந்தது இந்த நாகை மாவட்டம். சிக்கல் சிங்காரவேலர் கோயில், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா என நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக சமத்துவம் திகழும் மாவட்டம் நாகை மாவட்டம். எனது பிறந்தநாள் விழாவுக்கு பிறகு கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி திருக்குவளை இருக்கிற நாகை மாவட்டதில் நடக்கும் இந்த நிகழ்ச்சிதான். 

Advertisment
Advertisements

மீனவர்கள் விவகாரத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் விடுதலை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இலங்கை நீதிமன்றம் பெருந்தொகையை அபராதமாக விதிக்கிறது என்று மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

பிரதமர் மோடி பதவியேற்ற நாட்கள் முதல் இதுவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 3,656 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 116 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 616 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

2016-ம் ஆண்டு இந்திய - இலங்கை அமைச்சர்கள் கூட்டு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பிரதமர் பார்க்க வேண்டும். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து உறுதியான நடவடிக்கையை பிரதமர் எடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் பிரதமர் பேச வேண்டும். கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது. தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை சரி செய்ய மத்திய அரசு நிதி தரவில்லை. பள்ளி மாணவர்களுக்கு நிதி தரவில்லை. தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் இருமொழி கொள்கைதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது. ஆங்கிலம் கற்றுக்கொண்ட காரணத்தால் தான் உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உயர் பதவிகளுக்கு வர முடிகிறது. இந்தியை கற்றுக்கொண்டால் அது முடியுமா?

இந்தி ஆதிக்கம் எதற்கு என்றால் சிலரின் சமூக ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குதான். கடலூரை சேர்ந்த சிறுமி ஒருவர், மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் என்ன? நான் தருகிறேன் என்று தன்னுடைய சேமிப்பு தொகை 10 ஆயிரத்தை காசோலையாக அனுப்பியது என்னை கண்கலங்க வைத்தது. இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு இருப்பது கூட மத்திய அரசுக்கு புரியவில்லை. குழந்தைகளுக்கும் மத்திய அரசின் சதி தெரிந்துள்ளது. போராடி பெற்ற உரிமையை பறிக்க நினைக்கிறார்கள்.

தமிழகத்தின் உணர்வை ஒற்றுமையோடு வெளிப்படுத்த மார்ச் 5 ஆம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்வதாக கூறியுள்ளன. ஒருசில கட்சிகள் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளன. இது தனிப்பட்ட தி.மு.க.,வுக்கான பிரச்சினை இல்லை. தமிழகத்தின் உரிமை. கட்சிகள் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைத்து சுய நலத்துக்காக, நம்முடைய சந்ததிகளை அடகு வைக்காமல் நல்ல முடிவு எடுத்து, தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வாருங்கள்.

கவுரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க கலந்து கொள்ளும் என்ற செய்தி வந்திருப்பது மகிழ்ச்சி, வரவேற்கிறேன். தமிழகத்தின் உரிமைகளுக்காக நான் போராடுவேன். தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் 105 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கிவைத்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எவ.வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

க.சண்முகவடிவேல்

Stalin Nagapattinam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: