கோவையில் மறைந்த தி.மு.க முன்னோடி முன்னாள் எம்.பி இரா.மோகன் இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க முன்னோடியும், முன்னாள் எம்.பி.,யுமான இரா.மோகன் (81) கடந்த 10 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அன்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து இரா.மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் ஈரோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை இராமநாதபுரத்தில் உள்ள மறைந்த இரா.மோகன் இல்லத்திற்கு வந்து இரா.மோகனின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இரா.மோகன் அவர்களின் மனைவி சுகுணா, மகன் டிவேதிரா, மகள் கவிதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் தாண்டுவோம் என்பது, ஈரோடு கள ஆய்விற்கு பிறகு தெரிகின்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயக படுகொலை. ராகுல்காந்தி மீது போடப்பட்ட வழக்குகளை அவர் சட்டப்படி சந்திப்பார்,” என்று கூறினார்.
அம்பேத்கர் விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கேள்விக்கு, இந்தியா கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க கூட்டணி வசமாகும். யார் போட்டி என்பது காங்கிரஸ் கட்சியுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.
விஜய் அரசியலுக்கு வருவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, பார்க்கலாம் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“