பா.ஜ.க அரசின் ஒவ்வொரு செயலையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் பெரு மழை, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். சாலை, வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் கடும் பாதிப்படைந்தனர். இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அரசு வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்கியது.
அதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கும் தமிழக அரசு ரூ.6000 நிவாரணம் வழங்கியது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.38,000 கோடி நிவாரண நிதியாக கோரியிருந்தது. மேலும், நிவாரண நிதி வழங்க கோரி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ. 285 கோடி மற்றும் கடந்த டிசம்பரில் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முதற்கட்டமாக ரூ. 285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ. 115 கோடியும், ரூ. 397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து 16 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரூ.38,000 கோடி கோரியிருந்த நிலையில் ரூ.275 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
— M.K.Stalin (@mkstalin) April 27, 2024
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால்,…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.