தொகுதி மறுவரையறை: '30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும்' -அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தில் மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி உள்ள மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக அமைந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin meeting

தொகுதி மறுவரையறை நடவடிக்கையினால் தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளை குறைப்பது நம் குரலை நசுக்கும் முயற்சி என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க, வி.சி.க, தே.மு.தி.க, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம், ஆம் ஆத்மி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் என மொத்தமாக 56 கட்சிகள் பங்கேற்றன. பா.ஜ.க, த.மா.கா, நா.த.க ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

தி.மு.க சார்பில் ஆர்.எஸ். பாரதி, வில்சன், அ.தி.மு.க சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், ம.தி.மு.க சார்பில் வைகோ, துரை வைகோ, பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே மணி, வி.சி.க சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இடதுசாரிகள் சார்பில் முத்தரசன், பெ.சண்முகம், பெரியசாமி, சச்சிதானந்தம், தே.மு.தி.க சார்பில் பார்த்தசாரதி, இளங்கோவன், ம.நீ.ம சார்பில் கமல்ஹாசன், த.வெ.க சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்த்த தான் இந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும். 

Advertisment
Advertisements

தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதை குறைப்பதற்கான அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு 2026 ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யப்போகிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டு தான் செய்வார்கள்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ளதால் நம்முடைய தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்.பி.,க்கள் கிடைக்கமாட்டார்கள்.

தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தில் மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி உள்ள மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம். அதனால் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை எதிரிக்கும் நிலையில் உள்ளோம்.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.
இந்த இரண்டு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை. நமது தமிழகத்தின் உரிமை சார்ந்த கவலை.

தமிழ்நாடு எதிர்க்கொண்டிருக்கின்ற இந்த முக்கியமான பிரச்சனைகளை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள், ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன்பாக நான் வைக்கிறேன். கட்சி எல்லைகளை கடந்து அனைத்து கட்சிகளும் குரல்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனவே, இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்து ஆகவேண்டும். இதில் நமக்குள் கருத்து மாறுபாடுகள் இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.
இந்த விவகாரத்தில் கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் இணைய வேண்டும். தொகுதி மறுவரையறை நடவடிக்கையினால் தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளை குறைப்பது நம் குரலை நசுக்கும் முயற்சி. இது அரசியல் பிரதிநிதித்துவத்தின் மீதான நேரடி தாக்குதல். இந்த சதியை நாம் முறியடிக்க வேண்டும்.” என பேசினார்.

மேலும் தீர்மானத்தை முன்மொழிந்து, “தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை இந்த அனைத்து கட்சி கூட்டம் எதிர்க்கிறது. இது நியாயமற்ற செயல். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகள் தொடர வேண்டும். தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும். மக்களவை தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும். இதற்கான உறுதியை பிரதமர் அளிக்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Tamil Nadu Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: