பா.ஜ.க-வை தோற்கடிப்பது என்பது இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை. பா.ஜ.க ஆட்சியில் அனைத்து மக்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டு இருக்கிறது என தி.மு.க மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நந்தனத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி, தி.மு.க அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் பெண்கள் மாநாடாக அல்ல, இந்தியாவின் பெண்கள் மாநாடு இது நடந்து கொண்டிருக்கிறது. இந்திய கூட்டணியின் மகளிர் தலைமைகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும்போது தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகவும் பெருமைப்படுகிறேன். சென்னை சங்கமத்தை நடத்திய தங்கை கனிமொழி, இப்போது இந்திய சங்கமத்தை நடத்தியிருக்கிறார். 2004-ல் இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்றார் கருணாநிதி. இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை இன்றே வந்துவிடும்.
பா.ஜ.க-வை தோற்கடிப்பது என்பது இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை. பா.ஜ.க ஆட்சியில் அனைத்து மக்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சி வருவதற்காக பிரதமர் மோடி முயன்றிருக்கிறார். அது எதேச்சதிகாரத்துக்கு உதவுகிறது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் வீழ்த்தலாம்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என ஏமாற்றி வருகிறார்கள். ஆனால், அது உண்மையில் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த சட்டத்தை பா.ஜ.க இயற்றி இருக்கிறது. உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தினால் பாராட்டி இருக்கலாம். 2029, 2034-ல் தான் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால். 2024-க்கு பிறகு மோடி ஆட்சியே இருக்காது.
பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. மேலும் இந்த சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அப்படி வழங்கினால்தான் அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் ஒலிக்கும். ஆனால், அது ஒலிக்கக் கூடாது என்று தான் பா.ஜ.க நினைக்கிறது. இது பா.ஜ.க-வின் அரசியல் சதி. இதை சுட்டிக் காட்டினால் பெண்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துகிறோம் என்று மோடி அள்ளிவிடுகிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பு கேட்பது என்பது சாதி ரீதியாக பிரிப்பதற்கு அல்ல, அனைத்து மக்களும் அனைத்து விதமான உரிமைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான். இதை விட்டுக் கொடுத்தால் அடுத்தடுத்து சமூக நீதியை காவு வாங்கி விடுவார்கள். எந்த சூழ்நிலையிலும் சமூக நீதியை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. சமூக நீதியின் குரலைத்தான் ராகுல் காந்தி தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி. சமூக நீதி, மதசார்பின்மை, சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல் என்ற கோட்பாடுகளைக் கொண்டதாக இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுக்காக்கப்படும்.
இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலம் மகளிருக்கான உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் பரவும் மகளிர் உரிமை பெற்ற நாள் நிச்சயம் அமையும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கக்கூடிய இந்த மாநாட்டை நடத்தி காட்டிய தங்கை கனிமொழிக்கும், அவருக்கு துணை நின்ற மகளிரணிக்கும் வாழ்த்துக்கள்.” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.