Tamilnadu News Update TNEB : தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கொரோனா அல்லாத மற்ற பணிகளிலும் நடவடிக்கைள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை முதல்வருக்கு புகார் அளிக்க செல்போன் எண் மட்டுமே இருந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முதல்வருக்கு நேரடியாக புகார் அளிக்க இணையதள வசதி தொடங்கப்பட்டது.
மேலும் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் கொடுத்த புகார் மனு மீது ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்த நிலையில், அதற்காக தனி துறை தொடங்கப்பட்டு மக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் மின் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலையில், பொதுமக்களுக்கு மின் கட்டணங்கள் செலுத்த 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மக்களுக்கு மேலும் ஒரு வசதியாக மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக தலைமை அலுவலகத்தில் இந்த மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த நுகர்வோர் சேவை மையத்தில், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து வரும் அழைப்புகளுக்கு இச்சேவை மையம் மூலம் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil