சிந்துவெளி நாகரிகத்தை முதன்முதலில் வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரியான சர் ஜான் ஹுபர்ட் மார்ஷல், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் அறிக்கையை 20 செப்டம்பர் 1924 இல் வெளியிட்டார். அந்த அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த அறிவிப்பு இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலை நிறுவப்பட்டது. இதனையடுத்து, சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.