கோவை மேட்டுப்பாளையும் பகுதியில் காயம்பட்ட யாணைக்கு கும்கி யானை உதவியுடன் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப் முகாமிற்கு கொன்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்த யானை ஒன்று வாயில் காயத்துடன் வனத்துறையினரிடம் சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர், இதற்கு உதவியாக டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைத்தனர்.
தொடர்ந்து கும்கி யானையின் உதவியுடன் இன்று முத்துகல்லூர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தபட்டது இதனையடுத்து மயங்கிய அந்த காயம்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் சுகுமார், சதாசிவம் ஆகியோர் யானையை பரிசோதித்தனர்.

இந்த சோதனையில் யானைக்கு வாயில் உள்ள நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது இதனையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க காயம்பட்ட யானையை கயிறு கட்டி ஒதுக்கு புறமான இடத்திற்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். யானை பிடிபட்ட இடத்திலேயே தற்காலிகமாக நிழலுக்காக சாமியானம் அமைத்து அதில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் யானையின் நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் உள்ளதால் அதற்கு பத்து நாட்களாகவது சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் விரைவில் யானையை மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப் யானை முகாமிற்கு கொன்டு செல்லப்பட உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“