மாவட்ட தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்ததற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விண்ணப்ப நடைமுறை குறித்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கான பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பைத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை கடந்த 3 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
அதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. வருகிற 18 ஆம் தேதி வரை மாவட்ட தலைவர்கள், மாநில செயலாளர்கள், துணைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்காக கட்சி நிர்வாகிகள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். வரும் 15 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும். இந்த மனுக்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டு, பின்னர் நிர்வாகிகள் பட்டியல் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவட்ட தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான நடைமுறைக்குச் சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் 72 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய நடவடிக்கையை மாநிலத் தலைமை அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதோடு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆன்லைன் மூலமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டம் நடந்துள்ளது. இதனை சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மாவட்ட தலைவர் பதவிக்கான விண்ணப்பத்திற்கு 5,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதாகவும், அதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், அகில இந்திய தலைமையின் அறிவுறுத்தலின்படியே விண்ணப்ப நடைமுறை பின்பற்றபடுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காகவும், சிறப்பாக கட்சி பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஜனநாயகம் காக்கப்பட விண்ணப்ப நடைமுறை அவசியம். கட்சிப் பணியாற்ற ஏராளமானோர் காத்திருக்கின்றனர் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.