இரண்டு நாடகளுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 93,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 92,043 பேர் குணமடைந்துள்ளனர்; 1,124 உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வரிசையில், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அரசியல்வாதிகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள தினேஷ் குண்டுராவு வலியுறுத்தியுள்ளார்.
I have tested #Corona positive today. Therefore will be quarantining myself for 10 days.
I request all my primary contacts to get themselves checked and take necessary precaution.
— Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ (@dineshgrao) September 27, 2020
இது குறித்து தினேஷ் குண்டுராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பரிசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், நான் என்னை 10 நாட்கள் சுய தனிமைப்படுத்திக்கொள்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதோடு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ், முதல் முறையாக 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், தினேஷ் குண்டுராவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற தினேஷ் குண்டுராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோரை சந்தித்து உரையாடினார். அப்போது, அவர்களுடன் கே.எஸ்.அழகிரியும் உடனிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.