தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் புதிதாக தலைமையேற்ற திமுக அரசு 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தது.
அதன்படி கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் வரும் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு காலம் முடிய இன்னும் 2 நாட்களே மீதமுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் ஊரடங்கு நிலை குறித்து மருத்துவக்குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவக்குழு பரிந்துரைத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட 2 வார ஊரடங்கு மாதிரி இல்லாமல் இந்த முறை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கடைகள்திறந்திருக்கும் என்றும், வெளியூர் பயணிகள் நலன்கருதி, இன்றும் நாளையும் தமிழகத்தில் 4500 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இதில் சென்னையில் இருந்து 1500 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் இருந்து 3000 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும். தனியார் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிண்ண்ணு சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்ஙவும், உணவகங்கள் வழக்கம்போல காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், பகல் 12 மணிமுதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் ஏடிஎம் சென்டர்கள் வழக்கம்போல் இயங்க அனுமதி. உரிய மருத்தவ ஆவணங்களுடன் அடுத்த மாவட்டத்திற்கு செல்ல அனுமதி, வேளான் பொருட்கள், சரக்கு வாகனங்கள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி.
மருத்துவ காரணங்களுக்கு சென்றால் இ-பாஸ் தேவையில்லை. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.