தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
ஐரோப்பா போன்ற நாடுகளில் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் கொரோனா இரண்டாவது அலை தடுக்க முடியாமல் போனது என்று கூறப்படும் நிலையில், தமிழகத்தில் பள்ளி (9- 12ம் வகுப்புகள் மட்டும்), கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், விடுதிகளும் அடுத்த மாதம் 16 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,24,522 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 17, அரசு மருத்துவமனைகளில் 14 என மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் அனைவரும் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,983 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 551 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை என்பது 88 பேர் ஆக உள்ளது.

65% உயிரிழப்புகள் 5 மாநிலங்களில் இருந்து மட்டும் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவாக 36% மரணங்கள் ஏற்பட்டுள்ளது. மொத்த இறப்புகளில் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் 85% உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 69,484 பேருக்கு செய்யப்பட்டுள்ளது
குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 3,848 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,91,236 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 95.45% குணமடைந்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,164 ஆக குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 690 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 241, சேலம் – 145, செங்கல்பட்டு –148, திருவள்ளூர் – 133,என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளன.
சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 199916 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,191 ஆகும்.