Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. சமீபத்திய தகவலின் படி, சென்னை, கோயம்பத்தூர், சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் 100க்கும் அதிகமான கொரோனா தொற்று எண்ணிக்கை உள்ளது. அதிலும், குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் வீழ்ச்சி விகிதம் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.
அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளன.
மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் என்னிக்கை தொடர்ந்து 2 நாட்களாக 30,000 க்கும் குறைவாக பராமரிக்கப்படுகின்றன. இது, ஒரு நல்ல முன்னேற்றம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,14,235 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 36,470 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. கடைசியாக, இந்தியாவில் ஜூலை 18 அன்று தான் தினசரி பாதிப்புகள் இதைவிட குறைவாக இருந்தது. நாட்டின் தற்போதைய பாதிப்புகளில் 35 சதவீதம் வெறும் 18 மாவட்டங்களில் உள்ளன
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 11, அரசு மருத்துவமனைகளில் 16 என மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் அனைவரும் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது, நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது.
மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,983 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 69,344 பேருக்கு செய்யப்பட்டுள்ளது
குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 4,029 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,75,518 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 94.58% குணமடைந்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 27,734 ஆக குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 695 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 209, சேலம் – 146, செங்கல்பட்டு –144, திருவள்ளூர் – 115,என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,97,077 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,096 ஆகும்.